கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட நீர்நிலைகளுள் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் விரும்பி குளித்துவரும் இடம் கவியருவி. இந்த அருவிக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்மழை பெய்தது.
இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் பல்வேறு அருவிகளில் குளிக்க தடை விதித்தனர். மேலும், அருவிகளில் தொடர்ச்சியாக நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் தற்போது பொள்ளாச்சியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் இன்று முதல் கவியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபாலமுருகன், "சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்காக வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். ஆழியார் வழியாக வால்பாறை செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வனப்பகுதிகளை ஒட்டி வாகனங்கள் நிறுத்தக் கூடாது என சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்று அவர் தெரிவித்தார்.