சென்னை: பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டவர்கள் காமராஜர் படத்தை வரைந்து திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181 என்னாச்சு? என கேள்வி எழுப்பி மண்டபத்தில் பாட்டு பாடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து வரும் 12000 பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டுமென கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181 நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 8 வது நாளாக பள்ளி கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மண்டபத்திலும் தங்களின் போராட்டத்தை தொடர்ந்த பகுதி நேர ஆசிரியர்கள் கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்த நாளான இன்று காமராஜர் படத்தை வரைந்து அதன் மீது திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181 என்னாச்சு? என எழுதி வைத்து கோஷங்களை எழுப்பினர். மேலும் பார்வை மாற்றுதிறனாளி ஒருவர் திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? என பாட்டுப்பாடி தங்களின் கோரிக்கை முன் வைத்தார்.