திருவண்ணாமலை: செங்கம் அடுத்த கரியமங்கலம் பகுதியில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சுங்க சாவடியை கடந்து செல்கின்றன. இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஒன்று சுங்க சாவடியை கடந்து செல்ல முற்பட்டபோது சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாததால் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் வேறு வழியின்றி பேருந்தில் இருந்து இறங்கி சுங்க சாவடியை கடந்து செல்லும் வேறு பேருந்துகள் மூலமாக தங்களது பயணத்தை தொடர்ந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருவதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பணிமனைக்குட்பட்ட பேருந்துகளுக்கு, வாரம் ஒருமுறை மொத்தமாக சுங்க சாவடி கட்டணம் செலுத்தி வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக சுங்க சாவடி கட்டணம் செலுத்துவதற்கான வைப்புதொகையை பணிமனை நிர்வாகம் முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்துகளை அடிக்கடி நிறுத்தி வைத்துவிடுவதாக கூறப்படுகிறது. எனவே, பயணிகளின் நலன் கருதி அரசு இந்த விஷயத்தில் தீவிரம் காட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.