இராமநாதபுரம்: தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடைய ராமேஸ்வரம் புண்ணிய திருத்தலத்தின் முக்கிய கோயிலாக இருப்பது ராமநாதசுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் ஆடித் திருவிழா ஜூலை 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளான இன்று (ஜூலை 27) கன்னி லக்னத்தில் அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாள் ரதத்தில் எழுந்தருளினார். அப்போது, உள்ளூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் கோஷங்கள் எழுப்பி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
இந்த தேரோட்ட நிகழ்வானது நான்கு ரத வீதிகளில் நடைபெற்ற நிலையில் அம்பாள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நாளை மறுநாள் ஜூலை 29ஆம் தேதி தபசு மண்டகப்படியும், ஜூலை 30ஆம் தேதி அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் - அருள்மிகு ராமநாதசுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால், அடிப்படை வசதிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் செய்துள்ளனர். மேலும், போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.