ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள், தீவனம் மற்றும் தண்ணீர் தேடி மைசூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். அண்மைக்காலமாக இரு மாநில எல்லையான தாளவாடி, சாம்ராஜ் நகர் பகுதியில் சாகுபடி செய்த கரும்பை விவசாயிகள், லாரிகளில் ஏற்றி ஆசனூர் வழியாக சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
அண்மைக்காலமாக ஆசனூர் சாலையில் பயணிக்கும் கரும்பு லாரிகளில் இருந்து கரும்பை எடுத்து ருசித்து சாப்பிடும் யானைகள், காட்டுக்குள் செல்லாமல் சாலையில் முகாமிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. நேற்றிரவு சாம்ராஜ் நகரில் இருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றிய டெம்போ வாகனம், சத்தியமங்கலம் நோக்கி ஆசனூர் வழியாக சென்று கொண்டிருந்தது.
கரும்பு லாரியை எதிர்பார்த்து காத்திருந்த யானை, காய்கறி டெம்போவை கண்டு அதில் கரும்பு உள்ளதாக டெம்போவை நோக்கி நேராக வந்தது. இதை பார்த்த டெம்போ ஓட்டுநர், டெம்போவை பின்னோக்கி இயக்கியபடி வந்தார். இருப்பினும் யானை டெம்போ அருகே வந்து கரும்பு உள்ளதா என்று சோதித்து பார்த்துவிட்டு சென்றது. யானை வேறெந்த தொந்தரவு செய்யாமல் சென்றதால் டெம்போ ஓட்டுநர் நிம்மதி அடைந்தார்.